search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கரூர் மாணவி தற்கொலை"

    கரூர் மாணவியின் தற்கொலைக்கு காரணமான குற்றவாளி மிருகம் யாராக இருந்தாலும் அவரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று ராமதாஸ் கூறி உள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கரூர் மாவட்டம் வெண்ணெய்மலையில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்று வந்த மாணவி, தமக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைகளை தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்துகொண்டதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் வேதனையளிக்கின்றன.

    மாணவியின் தற்கொலை கடிதத்தில் உள்ள ஒவ்வொரு வாசகமும் தமிழ்நாட்டு மக்களின் மனசாட்சியை உலுக்குபவை ஆகும். ‘‘பாலியல் வன்கொடுமையால சாகுர கடைசி பொண்ணு நானாக தான் இருக்கனும். என்னை யார் இந்த முடிவு எடுக்க வெச்சான்னு நான் சொல்ல பயமா இருக்கு. இந்த பூமியில் வாழரதுக்கு ஆசைப்பட்டேன். ஆனா, இப்போ பாதியிலேயே போறேன்.

    பெரிதாகி நிறைய பேருக்கு உதவி பன்ன ஆசை. ஆனா முடியாதில்ல’’ என்ற அந்த மாணவியின் இறுதி வாசகங்களைப் படிக்கும்போது, அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் எந்த அளவுக்கு மன உளைச்சலையும், அச்சத்தையும் அனுபவித்திருப்பார் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.

    கடந்த ஒரு வாரத்தில் இது இரண்டாவது நிகழ்வு ஆகும். கடந்த 12-ந்தேதி கோவை தனியார் பள்ளி மாணவி ஒருவர் ஆசிரியரின் பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இப்போது கரூர் மாணவி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

    அவரது தற்கொலைக்கு காரணமான குற்றவாளி மிருகம் யாராக இருந்தாலும் அவரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

    ஒரு மாணவியின் தற்கொலையால் ஏற்பட்ட துயரம் தீருவதற்கு முன்பே, அடுத்த மாணவியையும் தற்கொலைக்கு தூண்டுகிறார்கள் என்றால் அந்த பாவிகளுக்கு சட்டத்தின் மீதும், அதை செயல்படுத்தும் அமைப்புகள் மீதும் பயமில்லை என்று தான் பொருள். இது மாணவிகளின் பாதுகாப்புக்கு நல்லதல்ல.

    மற்றொருபுறம் பாலியல் சீண்டலுக்கும், அச்சுறுத்தலுக்கும் ஆளாகும் மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது தவறு. இது இத்தகைய குற்றங்களைத் தடுக்க உதவாது. மாறாக, பாலியல் சீண்டல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீண்டும் மீண்டும் அதை செய்வதற்கான துணிச்சலையே தரும்.

    பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அம்பலப்படுத்தி, தண்டனை பெற்றுத் தருவதற்கான துணிச்சலை மாணவிகள் வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு அரசு துணை நிற்க வேண்டும்.

    இனிவரும் காலங்களில் பள்ளிகள், கல்லூரிகள், பணியிடங்கள் ஆகியவற்றில் பெண்களுக்கு பாலியல் தொல்லை வழங்கப்படுவதை தடுத்தல், பாலியல் கொடுமைகளுக்கு ஆளான பெண்களுக்கு, அதிலிருந்து மீண்டு வருவதற்கான உளவியல் ஆலோசனைகளை வழங்குதல், குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர சட்ட உதவிகளைப் பெறுதல் உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய விரிவான செயல்திட்டத்தை அரசு உருவாக்கி செயல்படுத்த வேண்டும். இதற்காக வல்லுனர் குழுவை அரசு அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


    கரூர் அருகே தனியார் பள்ளி மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் கடிதம் சிக்கியுள்ளதை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்:

    கரூர் அரசு காலனியைச் சேர்ந்தவர் ஜெயந்தி இவரது 17 வயது மகள், வெண்ணமலையில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியின் தந்தை மற்றும் பாட்டி ஆகியோர் அடுத்தடுத்து இறந்தனர். இதனால் மாணவி மன விரக்தியில் அமைதியாக இருந்ததாக தெரிகிறது. இதனை பார்த்த அவரது தாய், ஏன் அமைதியாக இருக்கிறாய் என்று கேட்டு, சமாதானப்படுத்தியுள்ளார்

    இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற மாணவி, மாலையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து அவரது தாய் ஜெயந்தி, வெங்கமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று? போலீசார் இறந்த மாணவியின் அறையில் சோதனை செய்துள்ளனர். அப்போது இறப்பதற்கு முன்பு அவர் எழுதி வைத்துள்ள உருக்கமான கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

    அந்த கடிதத்தில் பாலியல் தொல்லையால் சாகும்  கடைசி பொண்ணு நானாகத்தான் இருக்கனும்....என்னை யார் இந்த முடிவை எடுக்க வச்சார்ன்னு நான் சொல்ல பயமா இருக்கு. இந்த பூமில வாழன்னு ஆசைப்பட்டேன். ஆனா இப்போ பாதிலேயே போகுறேன்...இன்னோரு தடவ இந்த உலகத்துல வாழ வாய்ப்பு கிடைச்சா நல்லா இருக்கும். பெருசாகி நிறைய பேருக்கு உதவி பண்ணனுன் நு ஆச ஆன முடியாதில்ல.. ஐ லவ் யூ அம்மா...சித்தப்பா...மணிமாமா, அம்மு,, உங்க எல்லாரையும் எனக்கு ரொம்ப புடிக்கும் ஆனா நான் உங்க கிட்டலாம் சொல்லாம போறேன்..மன்னிச்சிருங்க இனி எந்த ஒரு பொண்ணும் என்ன மாதிரி சாகக்கூடாது. சாரி...என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

    இதையும் படியுங்கள்...ரெயில்களில் பயணிகளுக்கு மீண்டும் உணவு விற்பனை தொடக்கம்

    ×